×

காங்ஆர்ஜேடி கூட்டணியை முறித்து பாஜவுடன் கைகோர்த்தார் மீண்டும் பீகார் முதல்வர் ஆனார் நிதிஷ்: 2 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்பு

பாட்னா: காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான (ஆர்ஜேடி) கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் பாஜவுடன் கைகோர்த்து, 9வது முறையாக பீகார் முதல்வராக நேற்று பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்கா மற்றும் 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணி அமைய அடித்தளமாக செயல்பட்டவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். கூட்டணியின் முகமாக அனைத்து கட்சிகளும் தன்னை அங்கீகரிக்கும் என்ற நிதிஷின் எதிர்பார்ப்பு கைகூடவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் வழக்கம் போல் கூட்டணி மாற முடிவு செய்தார். பீகாரில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சி நடந்தது. இக்கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜவுடன் கைகோர்க்க நிதிஷ் முடிவு செய்தார். இதனால் கடந்த சில நாட்களாக பீகார் அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், எதிர்பார்த்தபடியே நிதிஷ் குமார் நேற்று காலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ் குமார், ‘‘இந்தியா கூட்டணிக்காக நான் எந்தளவுக்கு பாடுபட்டேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் மாநிலத்தில் மகாகட்பந்தன் கூட்டணியிலும் இந்தியா கூட்டணியிலும் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. இந்த கூட்டணியில் எதுவும் சரியாக நடக்கவில்லை. அங்கு எந்த வேலையும் முறைப்படி நடக்கவில்லை. எனவே இரு கூட்டணிகளில் இருந்து விலக முடிவு செய்தேன். கட்சியில் அனைவரிடமும் ஆலோசனை கேட்ட பிறகுதான் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது’’ என்றார். இதன் மூலம், ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையேயான மகாகட்பந்தன் கூட்டணி அரசு 18 மாதத்தில் கவிழ்ந்தது. அதே சமயம், 45 எம்எல்ஏக்கள் கொண்ட நிதிஷ் குமாருக்கு 78 எம்எல்ஏக்களை கொண்ட பாஜ கட்சி ஆதரவு அளித்தது. முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் சுயேச்சை ஒருவரும் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நிதிஷ் குமார் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

காலையில் முதல்வர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்த நிலையில், மாலையில் புதிய அரசு பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. இதில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இதில், 9வது முறையாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிதிஷுடன் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்கா ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும், பாஜவின் மற்றொரு தலைவரான பிரேம் குமார், மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) கட்சியின் சந்தோஷ் குமார் சுமன், சுயேச்சை எம்எல்ஏ சுமித் சிங், ஐக்கிய ஜனதா தளத்தின் விஜய் குமார் சவுத்ரி, விஜேந்திர யாதவ் மற்றும் ஷ்ரவன் குமார் ஆகியார் அமைச்சர்களாக பதவியேற்றனர். பீகாரில் அமைந்த புதிய அரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக பீகாரில் ஏற்பட்ட அரசியல் பரபரப்பு அடங்கி உள்ளது.

* ‘சந்தர்ப்பவாதி, பச்சோந்தி, பல்டு ராம்’பதவி சுகத்திற்காக அடிக்கடி கூட்டணி மாறும் நிதிஷ் குமார்

பீகாரின் நீண்ட கால முதல்வரான நிதிஷ் குமார், 9வது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கூட்டணியை மாற்றி, தொடர்ந்து முதல்வர் அரியணையில் வீற்றிருக்கும் நிதிஷ் குமாரின் சாணக்கியத்தனத்தை பாராட்டுபவர்களை விட விமர்சிப்பவர்கள்தான் அதிகம். தனது சுய அரசியல் லாபத்திற்காக கூட்டணி தர்மத்தை தூக்கி எறிந்து கொண்டிருக்கும் நிதிஷை ‘சந்தர்ப்பவாதி, பச்சோந்தி, பல்டு ராம்’ என பல பட்டப்பெயர் வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அவரது அரசியல் வாழ்க்கையை பார்க்கும், இதேபோல் தனது சுயநலத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் நிதிஷ் குமார் என்பது அம்பலமாகி உள்ளது. கடந்த 1974ல் மாணவ பருவத்தில் அரசியலுக்கு வந்த நிதிஷ்குமார், இதுவரை மொத்தம் ஐந்து கட்சிகளை மாற்றியுள்ளார். 1994ம் ஆண்டு ஜனதா தளத்தின் அங்கமாக இருந்தபோது முதல்முறையாக நிதிஷ்குமார் கட்சி மாறினார்.

பின்னர் ஜனதா தளத்தை விட்டு வெளியேறிய நிதிஷ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் லாலன் சிங் ஆகியோருடன் இணைந்து 1994ல் சமதா கட்சியை உருவாக்கி, 1995 சட்டசபை தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டார். இந்த காலகட்டத்தில் சமதா கட்சி வெற்றி பெறாததால், இடதுசாரி கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இதன் மூலம் கடந்த 1996ல் இரண்டாவது முறையாக மீண்டும் களமிறங்கினார். தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ்குமார், மோடியை பிரதமராக முன்னிறுத்தப்பட்டபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2014ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். ஒரு வருடம் கழித்து, 2015ல் பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். இந்த காலகட்டத்தில், பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். இதற்குப் பிறகு, ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் பெயர் வந்தபோது, நான்காவது முறையாக மீண்டும் நிதிஷ் குமார் பாஜவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். 2020 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜ இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இருப்பினும், 2022ம் ஆண்டில், நிதிஷ் குமார் மீண்டும் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி மகா கூட்டணியில் இணைந்தார். இந்த கூட்டணி அரசு கிட்டத்தட்ட 18 மாதங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த நிதிஷ் குமார், தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜவுடன் கைகோர்த்திருப்பது தேசிய அரசியலில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

* திரிணாமுல் கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நிதிஷ் குமார் அரசியல் குழப்பங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’’ என்றார்.

* 9 முறை முதல்வரான வரலாறு

கடந்த 23 ஆண்டில் நிதிஷ் குமார் 9 முறை பீகார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவரது முதல்வர் பதவிப் பயணம் இதோ…

* முதல் முறை: கடந்த 2000ம் ஆண்டில் ஒன்றியத்தில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், மைனாரிட்டி அரசு காரணமாக அவர் ஒரே வாரத்தில் பதவி விலகினார்.

* 2வது முறை: கடந்த 2005ல் மீண்டும் பாஜ ஆதரவுடன் நிதிஷ் குமார் பீகார் முல்வராக பொறுப்பேற்றார். 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தார்.

* 3வது முறை: 2010 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 141 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில் வென்றது. இதன் மூலம் நிதிஷ் 3வது முறையாக முதல்வரானார்.

* 4வது முறை: 2014ல் நிதிஷ் குமார் பிரதமர் கனவில் இருந்த நிலையில், பாஜ கட்சி அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இதற்கு நிதிஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதே சமயம் 2014 மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று நிதிஷ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜிதன் ராம் மஞ்சியை முதல்வராக்கினார். அடுத்த 9 மாதத்தில் வலுக்கட்டாயமாக மஞ்சியை ராஜினாமா செய்ய வைத்து, 4வது முறையாக நிதிஷ் முதல்வரானார்.

* 5வது முறை: கடந்த 15 ஆண்டாக தனக்கு ஆதரவாக இருந்த பாஜவை 2015ல் கழற்றிவிட்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் இணைந்து மகாகட்பந்தன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி வெற்றி பெற 5வது முறையாக நிதிஷ் முதல்வரானார்.

* 6வது முறை: அடுத்த 2 ஆண்டில், 2017ல் மகாகட்பந்தன் கூட்டணியை கழற்றி விட்ட நிதிஷ் மீண்டும் பாஜ பக்கம் சாய்ந்தார். 6வது முறையாக முதல்வாரானார்.

* 7வது முறை: 2020 சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்து நிதிஷ் கட்சி போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றியது. 7வது முறையாக நிதிஷ் முதல்வரானார்.

* 8வது முறை: அடுத்த 2 ஆண்டில் 2022ல் மீண்டும் பாஜவை கழற்றிவிட்டு மகாகட்பந்தன் கூட்டணியுடன் கைகோர்த்தார். 8வது முறையாக முதல்வரானார்.

* 9வது முறை: 5வது ஆண்டு பதவிக்காலம் முடியும் முன்பாகவே, 18 மாதத்தில் மகாகட்பந்தன் கூட்டணியை கை கழுவிய நிதிஷ் மீண்டும் பாஜவுடன் இணைந்தார். 9வது முறையாக முதல்வராகி உள்ளார்.

* பாஜ கூட்டணியிலும் நிதிஷ் நீடிக்க மாட்டார்

தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ‘‘நிதிஷ் தந்திரமான நபர். இப்போதைய அவரது இந்த பாஜ உடனான கூட்டணி வரும் 2025 சட்டப்பேரவை தேர்தல் வரை கூட நீடிக்காது. இதற்கெல்லாம் பீகார் மக்கள் வட்டியும் முதலுமாக சேர்த்து திருப்பித் தருவார்கள். 2025 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 20 தொகுதிக்கு மேல் ஜெயிக்காது’’ என்றார்.

* துரோகத்தில் வல்லவரான நிதிஷ் சரியான பச்சோந்தி

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், ‘‘நாட்டில் ‘ஆயா ராம், காயா ராம்’ (வருவார்கள், போவார்கள்) போன்றவர்கள் பலர் உள்ளனர். ஆர்ஜேடி தலைவர் லாலு மற்றும் அவரது மகன் தேஜஸ்வியிடம் நான் பேசிய போது, நிதிஷ் குமார் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறார் என்று தகவல் தெரிவித்தனர். நிதிஷ் குமார் கூட்டணியில் இருக்க விரும்பினால், இருந்திருப்பார். எனவே அவரது விலகல் முடிவு எங்களுக்கு முன்பே தெரியும். இந்த நேரத்தில் நாங்கள் எந்த தவறான செய்தியும் வெளியாவதை விரும்பவில்லை’’ என்றார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘விரைவில் பீகாரில் நுழைய உள்ள ராகுலின் நீதி யாத்திரையால் பிரதமரும், பாஜவும் பயந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. எனவே கவனத்தை திசை திருப்ப அரசியல் நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி அரசியல் கூட்டணியை மாற்றும் நிதிஷ் குமார், நிறங்களை மாற்றும் பச்சோந்திகளுக்கே கடும் போட்டியை கொடுத்து வருகிறார். துரோகத்தில் வல்லவரான அவரையும், அவரை ஆட வைப்பவர்களையும் பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். சரியான பாடம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. ஆங்காங்கே சில ஸ்பீட் பிரேக்கர்கள் உள்ளன. ஆனால், நாங்கள் திமுக, என்சிபி, டிஎம்சி, சமாஜ்வாடி போன்ற அனைத்து கட்சிகளும் பாஜவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்’’ என்றார். காங்கிரஸ் தலைவர் பவன் கேரா அளித்த பேட்டியில், ‘‘பாஜ கூறுவது போல் அவர்களுக்கு மக்களவை தேர்தலில் 400 இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும். உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும் என்பதை இது காட்டுகிறது. அதனால் தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள்’’ என்றார்.

* குப்பை தொட்டிக்கு குப்பை சென்றுவிட்டது

சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா தனது டிவிட்டர் பதிவில், ‘‘குப்பை மீண்டும் குப்பைத் தொட்டிக்குள் செல்கிறது. குப்பையின் துர்நாற்றத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்’’ எனக்கூறி குப்பை வண்டி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் நிதிஷ் குமார் வாரிசு அரசியல் பற்றி விமர்சித்தார். இதற்கு நிதிஷை கடுமையாக விமர்சித்து ரோகிணி ஆச்சார்யா தனது டிவிட்டரில் பதிவு வெளியிட்டு நீக்கியது சர்ச்சையானது. இந்த பதிவுதான் முதல் முறையாக நிதிஷ், லாலு கட்சிகள் இடையே மோதல் வெடித்திருப்பதை பகிரங்கப்படுத்தியது.

* காங்.கின் பிடிவாதமே வீழ்ச்சிக்கு காரணம்

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசில் உள்ள சிலர் இந்தியா கூட்டணியின் தலைமை பதவியை கைப்பற்ற பார்க்கின்றனர். அந்த சதியின் ஒரு அங்கமாகத்தான் கூட்டணியின் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அந்த முடிவு எங்கள் கட்சியை அதிர்ச்சி அடையச் செய்தது. எங்களுக்கும் ஆர்ஜேடி கட்சிக்கும் இடையே சில முரண்பாடுகள் இருந்தன. ஆனால் அது வளர்ந்ததற்கு காங்கிரஸ் தான் காரணம். காங்கிரசின் பிடிவாதம் தான் இந்தியா கூட்டணி வீழ்ச்சிக்கு காரணம். பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் அளவுக்கு அதிமான இடங்களை காங்கிரஸ் கேட்கிறது. அவர்களின் நீதி யாத்திரையில் பங்கேற்குமாறு எங்களை கட்டாயப்படுத்துகின்றனர். காங்கிரஸ் வலுவாக உள்ள எந்த மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் வாய்ப்பளிப்பதில்லை’’ என்றார்.

* பிரதமர் மோடி வாழ்த்து

பீகாரில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘பீகாரில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் தே.ஜ. கூட்டணி அரசு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளும்’’ என்றார்.

* ‘இதெல்லாம் நிறுத்தணும்’ சொல்கிறார் பாஜ எம்பி

மேற்கு வங்க பாஜ எம்பி திலீப் கோஷ் அளித்த பேட்டி, ‘‘வழக்கமாக ஒரு தலைவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை முதல்வராக பதவியேற்பார். ஆனால் நிதிஷ் குமார், ஐந்தாண்டு பதவிக்காலத்தில் குறைந்தது 2 அல்லது 3 முறை பதவியேற்கிறார். அதுவும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கூட்டணிகளுடன் பதவியேற்கிறார். இது அரசியல் சந்தர்ப்பவாதம், இது நிறுத்தப்பட வேண்டும்’’ என்றார்.

* தேஜ கூட்டணியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்

முதல்வராக பதவியேற்ற பின் பேட்டி அளித்த நிதிஷ் குமார், ‘‘நான் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தேன். நாங்கள் வெவ்வேறு பாதையில் சென்றோம். இப்போது ஒன்றாக இணைந்துள்ளோம். இனி அப்படியே இருப்போம். நான் ஏற்கனவே இருந்த இடத்திற்கு திரும்பி வந்துள்ளேன். மற்றபடி இங்கிருந்து வேறெங்கும் செல்லும் கேள்விக்கே இடமில்லை. தற்போது 8 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மீதமுள்ளவர்களின் பெயர்கள் விரைவில் முடிவு செய்யப்படும். பாஜ தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் முன்னாள் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக இருப்பார்கள். பீகாரின் வளர்ச்சிக்கு எப்போதும் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்’’ என்றார்.

* மக்களவை தேர்தலில் ஜேடியு கதை முடியும்

லாலுவின் இளைய மகனும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘நிதிஷ் ஒரு மரியாதைக்குரிய தலைவர். 2020ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என நான் கூறியபோது, எதிரணியில் இருந்த நிதிஷ் என்னை கேலி செய்தார். அந்த திசையை நோக்கி அவரை செயல்பட வைத்தேன். ஆனால் அதற்கான நற்பெயரை அவர் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. இதெல்லாம் பாஜவுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி. எப்படியும் ஐக்கிய ஜனதா தளத்தின் கதை வரும் மக்களவை தேர்தலில் முடிவடையும்’’ என்றார்.

The post காங்ஆர்ஜேடி கூட்டணியை முறித்து பாஜவுடன் கைகோர்த்தார் மீண்டும் பீகார் முதல்வர் ஆனார் நிதிஷ்: 2 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Nitish ,BJP ,CongressRJD ,Bihar ,Chief Minister ,Deputy Chief Ministers ,Patna ,Nitish Kumar ,Congress ,Rashtriya Janata Dal ,RJD ,Bajwa ,Chief Minister of ,Samrat Choudhary ,Vijay Kumar Sinha ,CM ,
× RELATED பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத...